ஆமணக்கு இலைகளை தின்ற 7 சிறுவர்களுக்கு வாந்தி
செந்துறை அருகே விளையாடி கொண்டிருந்தபோது ஆமணக்கு இலைகளை தின்ற சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வெளியூர்களுக்கு செல்லுதல், விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் செந்துறை அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் நேற்று சிறுவர், சிறுமிகள் கூட்டமாக விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் நின்ற ஆதாளை (காட்டு ஆமணக்கு) செடிகளில் உள்ள இலைகளை பறித்து தின்றனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 7), சுரேந்திரன் (5), சந்தானகுமார் (7), மணிமாறன் (5), சுப்புலட்சுமி (12), வீரலட்சுமி (5), கீர்த்திகா (7) ஆகிய 7 சிறுவர்-சிறுமிகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதைக்கண்டு அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.