ஓட்டலில் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் இறைச்சி உணவுகளை சாப்பிட்டார்.
அதே போல வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சாப்பிட்டுள்ளனர். 2 குடும்பத்தையும் சேர்ந்த 8 பேருக்கும் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து இருவரும் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள புகாருக்கு உட்பட்ட அசைவ ஓட்டலில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்களுக்காக செய்து வைக்கப்பட்டிருந்த பிரியாணி மற்றும் அங்கு இருந்த சமையல் பொருட்களை ஆய்வு செய்து அதனுடைய மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவு வந்த பிறகு அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.