விமான சாகச நிகழ்ச்சியை காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை


விமான சாகச நிகழ்ச்சியை காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
x
தினத்தந்தி 6 Oct 2024 6:40 AM GMT (Updated: 6 Oct 2024 8:09 AM GMT)

விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் இந்த சாகச நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சி பாராசூட் சாகசத்துடன் தொடங்கியது. பயிற்சி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவினர் நீல நிற பாராசூட் மூலம் வானில் இருந்து குதித்து சாகசம் செய்தனர். அடுத்ததாக ஹெலிகாப்டர்களில் மெரினா கடற்கரையை வட்டமடித்தபடி வலம் வந்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி, பணயக்கைதிகளை மீட்பதுபோல் வீரர்கள் சாகசம் செய்தனர். தொடர்ந்து விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சியை காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் மெரினாவுக்கு வருகை தந்தனர். தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகளும், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.


Next Story