விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலம் சேதமடைந்த நிலை


விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலம் சேதமடைந்த நிலை
x

பயன்பாட்டிற்கு வந்த 3 ஆண்டுகளில் விருதுநகர் ராமமூர்த்திரோடு ரெயில்வே மேம்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது.

விருதுநகர்

பயன்பாட்டிற்கு வந்த 3 ஆண்டுகளில் விருதுநகர் ராமமூர்த்திரோடு ரெயில்வே மேம்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என கோாரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலம்

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ெரயில்வே லெவல் கிராசிங் உள்ள நிலையில் வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தவிர்க்க அந்த இடத்தில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து. இந்தநிலையில் கடந்த 2008-ம் ஆண்டு விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. வரதராஜன் சட்டசபையில் இதனை வலியுறுத்தினார். இதற்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்க பல்வேறு பிரச்சினைகளால் தாமதம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 26.5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தனது தொகுதி மேம்பாட்டுநிதியில் மேம்பாலத்தில் மின்விளக்குகளுக்கு ஏற்பாடு செய்தார்.

சேதமடைந்த நிலை

இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் பாலத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து ஏறும் பகுதியில் பாலம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் வாகன விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

ஆனாலும் நெடுஞ்சாலை துறையினர் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. பாலம் மேற்கு பகுதியில் ஏறும் இடத்தில் தான் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மேலும் தாமதப்படுத்தாமல் மேம்பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த இடங்களிலும் உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையேல் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


Next Story