தேர்தல் நடத்தை விதிகள் மீறல்: அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. புகார்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் நேற்று கொடுத்த புகார் மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
விழுப்புரம் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகச் சென்ற அமைச்சர் பொன்முடி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருக்கிறார். தேர்தல் விதியின்படி, வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு 100 மீட்டருக்கு முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு, வேட்பாளருடன் 4 பேர் செல்ல வேண்டும்.
ஆனால் அந்த விதியை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வாசலிலே வாகனத்தில் சென்று இறங்கி உள்ளார். எனவே அமைச்சர் பொன்முடி மீது உரிய சட்ட பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சொல்லாத ஒரு விஷயத்தை, அவர் சொன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரமாக செய்து வருகிறார். எனவே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.