விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sept 2023 12:30 AM IST (Updated: 20 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

தென்காசியில் விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஒரு சிலையும், வேன் ஸ்டாண்டு, செண்பக விநாயகர் கோவில் தெரு, கீழப்புலியூர், வாய்க்கால் பாலம், கூலக்கடை பஜார், எல்.ஆர்.எஸ். பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று மாலையில் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதில் வேன் ஸ்டாண்டு, எல்.ஆர்.எஸ்.பாளையம், கூலக்கடை பஜார், வாய்க்கால் பாலம் ஆகிய 4 சிலைகளும் காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்பு வந்து சேர்ந்தன.

பாதியில் நிறுத்தம்

செண்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள விநாயகர் சிலையை கோவில் முன்பு கொண்டு வந்து ரத வீதியை சுற்றி ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கும், அதுபோல் கீழப்புலியூரில் இருந்து வந்த சிலையையும் ரதவீதிகளை சுற்றி ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கும் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால் இந்த 2 சிலைகளுக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தென்காசி தலைமை தபால் நிலையம் அருகில் கீழப்புலியூரில் இருந்து சிலையுடன் வந்த ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதே போன்று கோவில் முன்பு நின்ற 5 சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாசில்தார் சுப்பையன், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாலை 5 மணி முதல் சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த 2 சிலைகளையும் ரதவீதிகளை சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் கரைக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அனைத்து சிலைகளும் ரதவீதிகளை சுற்றி சிற்றாறு யானைப்பாலம் பகுதியில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, கவுன்சிலர்கள், வக்கீல் வெங்கடேச பெருமாள், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கி முத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story