தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா
தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாககொண்டாடப்பட்டது. 39 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறப்பட்ட சூழ்நிலையில் 32 இடங்களில் மட்டும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தா.பழூர் பகுதியில் 2 சிலைகள் மட்டும் காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாலையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. மீதமுள்ள சிலைகள் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் கரைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் விநாயகருக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து படையல் இட்டு விநாயகரை வழிபட்டனர். தா.பழூர் கிராமத்தில் ஒரு வீட்டில் அரிசிமாவு விநாயகர் சிலை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மற்றும் ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவும், நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்கவும் அரிசி மாவில் விநாயகர் சிலை செய்து வழிபட்டதாக அந்த குடும்பத்தார் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கடைவீதிகளில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.