விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை கடைவீதியில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை கடைவீதியில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாகை கடைவீதியில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
முழுமுதல் கடவுளாக வணங்கப்படுபவர் விநாயகர். கணபதி, ஆனை முகன் என பல்வேறு பெயர்களில் வழிபடப்பட்டு வரும் விநாயகருக்கு சதுர்த்தி விழா ஆண்டுதோறும் தமிழ் ஆண்டின் 5-வது மாதமான ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக நாகை மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளுக்கு இன்று மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்தனர். நாகை பகுதியில் உள்ள கடைகளில் தேங்காய், பழம், பூ, வெற்றிலை, விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை, பொறி, கடலை, இலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகமாக இருந்தது. அதேபோல் சிறிய அளவிலான சிலைகளும் அதிக அளவில் விற்பனையாகின.
சிலைகள் கரைப்பு
நாகை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இவற்றை ஆறு, குளங்கள், கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளையும், வருகிற 4-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
நாகை நீலாயதாட்சியம்மன் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் சிலை ஊர்வலம் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சிலை ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக நாகூர் வெட்டாற்றங்கரை வரை நடக்கிறது.
அமைதியான முறையில்...
சக்தி விநாயகர் குழு மூலம் 95 விநாயகர் சிலைகள் ஊர்வலம் வருகிற 4-ந் தேதி நாகை சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் இருந்து புறப்படுகிறது. இந்த சிலைகள் புதிய கடற்கரையில் கரைக்கப்படும். கீழ்வேளூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள் நாளை கடுவையாற்றில் கரைக்கப்பட உள்ளன. இதேபோல் கீழையூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் ஊர்வலம் நாளை நடக்கிறது.
நாகை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு மற்றும் ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.