விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்
விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என கடலூரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி, குடியிருப்போர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைநகரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மன்னார்குடி, காரைக்கால் எக்ஸ்பிரஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம், உழவன், திருப்பதி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.
மறியல் போராட்டம்
சேலம்- விருத்தாசலம் மற்றும் மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரெயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். கடலூர் -புதுச்சேரி-சென்னை இருப்பு பாதை திட்டத்தை உருவாக்கிட வேண்டும். திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ரெயில் நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் வருகிற 30-ந் தேதி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் செய்திருந்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன், மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி அருள்பாபு, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, மீனவர் சங்க தலைவர் சுப்பராயன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.