போதைப்பொருள் இல்லா மாவட்டமாக விழுப்புரத்தை உருவாக்க வேண்டும்
விழுப்புரத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார்
விழுப்புரம்
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது:-
மாணவர்களுக்கு அறிவுரை
தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி- கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிடும் வகையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், நீங்கள்தான் வருங்காலத்தில் நாட்டின் வளர்ச்சித்தூண்களாக இருக்கப்போகிறீர்கள். ஆகவே ஒவ்வொரு மாணவ- மாணவியரும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தங்களுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குறும்படம் ஒளிபரப்பு
இதனை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலமாக நான் முதல்வன் ஓராண்டு வெற்றி விழா குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை கலெக்டர் சி.பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், உதவி ஆணையர்(கலால்) சிவா, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.