விழுப்புரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் நாளை மறுநாள் தொடக்கம்


விழுப்புரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் நாளை மறுநாள் தொடக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நவீன வசதிகளுடன் விழுப்புரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது. இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம்

தமிழகத்தில் விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், நாகர்கோவில், திண்டுக்கல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களையும் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையத்தையும் விரிவாக்கம் செய்து நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த மத்திய அரசின் ரெயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டப்பணிகள் தொடக்க விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அன்று பிரதமர் நரேந்திரமோடி, டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் மேற்கண்ட ரெயில் நிலையங்களின் நவீனமயமாக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

அதிகாரிகள் ஆய்வு

இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விழா முன்னேற்பாடு பணிகளை நேற்று தென்னக ரெயில்வே உதவி பொது மேலாளர் கவுசல்கிஷோர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரெயில் நிலைய 1-வது நடைமேடையில் விழா மேடை, பந்தல் அமைப்பது குறித்தும், விழாவில் பங்கேற்க வருபவர்களுக்காக இருக்கை வசதிகள், விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க அகண்ட திரை அமைப்பது மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கூடுதல் பேட்டரி கார் சேவை

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் முக்கிய சந்திப்பு ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழும் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீனமயமாக்கப்பட உள்ளது. ரெயில் நிலையத்தில் தற்போதுள்ள 6 நடைமேடைகளிலும் பயணிகளின் வசதிக்காக போதிய அளவில் இருக்கை வசதிகள், அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரைகள் அமைப்பது, பயணச்சீட்டு எடுக்கும் மையத்தை போதுமான இடவசதியுடன் விரிவாக்கம் செய்வது, ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் பகுதியில் முகப்பு வழியே தெரியாமல் உள்ளதால் முகப்பு வழி ஏற்படுத்தி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. இது தவிர முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கூடுதலாக பேட்டரி கார் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story