விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு... ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் மனு


விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு... ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 21 March 2023 1:56 PM GMT (Updated: 21 March 2023 4:15 PM GMT)

ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பதிவுசெய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட பேர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தை நடத்தி வருவதாகவும், தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஆவணங்களும் பெற்று இல்லத்தை நடத்திவருவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தவறு என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களிடம், டெல்லியில் இருந்து வந்த தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story