குடிசை வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு


குடிசை வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Sept 2022 12:30 AM IST (Updated: 21 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே குடிசை வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

மத்தூர்:-

போச்சம்பள்ளி அருகே குடிசை வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிசை வீடுகள்

போச்சம்பள்ளியை அடுத்த பனங்காட்டூர் பஞ்சாயத்து கலைஞர்நகர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதி அரசு புறம்போக்கு நிலம் என்றும், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைதொடர்ந்து போச்சம்பள்ளி தாசில்தார் திலகம் மற்றும் அதிகாரிகள் கலைஞர் நகருக்கு சென்றனர். அங்கு ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்குவாதம்

மேலும் தாங்கள் வேறு இடங்களில் வசிப்பதற்கு எங்களுக்கு நிலமும் இல்லை. வீடும் இல்லை. எனவே நாங்கள் இதே இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும். இல்லை என்றால் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.


Next Story