மயானத்திற்கு செல்ல சாலை வசதிக்கோரி கிராமமக்கள் மறியல்


மயானத்திற்கு செல்ல சாலை வசதிக்கோரி கிராமமக்கள் மறியல்
x

நச்சலூர் அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதிக்கோரி கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சாலை ஆக்கிரமிப்பு

ேதாகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 100 குடும்பத்தின் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் உடலை எரிப்பதற்கான மயானம் சின்னப்பனையூர் குளத்தில் இருந்து பொட்டாச்சியம்மன் குளத்திற்கு செல்லும் ஆற்றுவாரி கரையில் அமைந்து உள்ளது.

இந்நிலையில் சின்னப்பனையூர் குளத்தில் இருந்து பொட்டாச்சியம்மன குளத்திற்கு செல்லும் ஆற்றுவாரி கரை விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மறியல்

இதனால் மழைக்காலங்களில் மயானத்திற்கு செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் மயானத்திற்கு உடலை எடுத்து செல்வதற்கு சிரமம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நெய்தலூர் ஊராட்சி சார்பில் சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நங்கவரம் மெயின் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மயானத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மயானத்திற்கு செல்வதற்கு நிரந்தர சாலை வசதி அமைத்து தரக்கோாி சின்னப்பனையூர் ஆதிதிராவிடர் பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை ஒன்றிய ஆணையர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மயானத்திற்கு நிரந்தரமான சாலை வசதி, சின்னப்பனையூரில் மின்சாரம், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே நெய்தலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக அறிக்கை பெறப்பட்டு உள்ளது. ஆகவே 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நங்கரவம்-காவல்காரன்பட்டி மெயின் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story