கோவில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


கோவில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x

கோவில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டர் விசாகனிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இந்த நிலையில் ஆத்தூர் தாலுகா போடிக்காமன்வாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது தங்கள் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. அதேபோல் 5-வது வார்டு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

நடவடிக்கை

எனவே கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன், 5-வது வார்டு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுக்க வந்ததாக போலீசாரிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி போடிக்காமன்வாடியை சேர்ந்த சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 157 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story