இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம கிராம மக்கள் நேற்று மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்:

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம கிராம மக்கள் நேற்று மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் குஜிலியம்பாறை தாலுகா தொப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொப்பநாயக்கனூரில் வசிப்பவர்களில் பலர் வீடு இல்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் தலித்ராஜா, மாவட்ட செயலாளர் வினோத் உள்பட சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பாதை வசதி வேண்டும்

இதேபோல் நிலக்கோட்டையை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நிலக்கோட்டை பூ மார்க்கெட் அருகே நாங்கள் சிறிய அளவிலான சரக்கு வாகனங்களை நிறுத்தி வந்தோம். தற்போது அங்கு கனரக வாகனங்களை சிலர் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கனரக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள கிழக்குப்புதூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் பாதை வசதி இல்லை. தெருக்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு பாதை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

155 மனுக்கள்

வடமதுரையை சேர்ந்த பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் ராமர் கொடுத்த மனுவில், பேரூராட்சி நிர்வாகத்தினர் எனக்கு முறையாக பணி வழங்குவதில்லை. எனது சம்பளத்தையும் குறைத்துவிட்டனர். தற்போது பணிக்கு வரவேண்டாம் என்றும் கூறுகின்றனர். இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 155 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Next Story