அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராமமக்கள்
வடமாமாந்தூரில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராமமக்கள்
வடமாமாந்தூரில்
அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராமமக்கள்
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வடமாமாந்தூர். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி, நடுத்தெரு ஆகிய 5 தெருக்களில் சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர்கள் நோயின் பிடியில் சிக்கி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டிகள்
இங்குள்ள நடுத்தெரு, தெற்கு தெரு, கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தெருக்களின் மையப் பகுதி மற்றும் கடைசி பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பழுதடைந்து காட்சி பொருளாகி விட்டதால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதேபோல் இங்குள்ள பள்ளி வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நூலக கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இங்கு பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் இருப்பதால் நூலகத்தை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலித்து வருகிறது.
சமூகவிரோதிகள் அச்சுறுத்தல்
பள்ளிக்கூடம் அருகில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அதை மீ்ண்டும், மீண்டும் புதுப்பித்து காட்சிப்பொருளாகவே வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு சமூகவிரோதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இங்குள்ள தெருக்களில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால் சிமெண்டு சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதை காண முடிகிறது. நாளடைவில் சிமெண்டு சாலையில் பாசிபிடித்து அதில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் அவல நிலை உள்ளது. கழிவுநீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் வீடுகளின் கதவு, ஜன்னல்களை அடைத்துக்கொண்டுதான் உள்ளே இருக்க வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
உடனடி நடவடிக்கை
இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, இங்கு கட்டித்தரப்பட்டுள்ள நூலகம், சுகாதார வளாகம் போன்றவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து கிடப்பதால் குடிநீா் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்கடுக்க வெகுதூரம் நடந்து சென்று விவசாய கிணறுகள், பம்புசெட் போன்றவற்றில் தண்ணீரை பிடித்து வர வேண்டிய நிலை உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் அடிப்படை வசதிகள் என்பது எங்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே கிராமமக்களின் மனவேதனையை புரிந்து கொண்டு வடிகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தருவதோடு, பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம், நூலகம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.