சாலையில் படுத்து கிராம மக்கள் நூதன போராட்டம்
முதுகுளத்தூர் அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மொ.கடம்பன்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளதால், அதனை சீரமைத்துத்தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உச்சி வெயிலில் சாலையில் அமர்ந்து படுத்து உறங்கி அதிகாரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி அவசர தேவைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கக் கோரி கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நூதன போராட்டம்
இந்தநிலையில் சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேதமடைந்த சாலையில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலையானது கடம்பன்குளம் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டருக்கு சேதம் அடைந்ததோடு சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் புதர்போல் மண்டி கிடப்பதால் அவ்வழியாகச் செல்லும் பெண்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவசர தேவைக்கு கூட 108 ஆம்புலன்ஸ் வர முடியாமல் சிரமப்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினால் கடம்பன்குளம் கிராமத்தினர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அனைத்தும் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.