இறந்த கருடனை பாடைகட்டி சுமந்து சென்ற கிராம மக்கள்
இறந்த கருடனை பாடைகட்டி சுமந்து சென்ற கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம், செப்
மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்த திம்மராயம்பாளையம் இந்திரா நகரில் ஆசிரியை மாரம்மாள் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது.இங்கு கழுத்து பகுதியில் வெள்ளை நிறம் கொண்ட கருடன் ஒன்று அடிக்கடி வந்து வானில் வட்டமடிப்பது வழக்கம்.
இந்த கருடனை அங்கு காணும்போதெல்லாம், அங்கு வரும் பொதுமக்கள் கிருஷ்ணா... கிருஷ்ணா என்று கையெடுத்து கும்பிடுவதும் வழக்கம். இந்த கருடனுக்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரையும் வைத்து அழைத்தனர்.
இந்த நிலையில் அந்த கருடன் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இதனை அறிந்த ஆசிரியை மாரம்மாள் கவலை அடைந்தார். இதுகுறித்து ஊர் பெரியவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதைக் கேட்டதும் ஊர் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கருடன் உயிரிழந்தால் மழை பெய்யாது என்ற ஐதீகம் உள்ளதாக அச்சமடைந்தனர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ரேணுகா ராஜன், ரங்கராஜன், ராஜசேகர், சின்னசாமி ஆகியோர் உயிரிழந்த கருடனை உரிய மரியாதை யுடன் தகனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து திம்மராயம்பாளையம், இலுப்ப பாளையம் ஆகிய கிராம மக்கள் சார்பில் இறந்த கருடனுக்கு பாடை ஒன்றை கட்டினர். பின்னர் கருடனை அதில் வைத்து உரியசடங்குகளை செய்தனர்.
இந்திரா நகரில் இருந்து இறந்த கருடனுடன் பாடையை சுமந்த வண்ணம் மயானத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். தாசர்கள் சங்கு ஊதிக்கொண்டே முன்னே செல்ல ராமா....ராமா...கோவிந்தா என கோஷங்களை கிராம மக்கள் முழங்கிக் கொண்டே சென்றனர்.
இந்த ஊர்வலம், கே.ஜி.என்.நகர் வழியாக சென்று திம்மராயம்பாளையம் மயானத்தை அடைந்தது. அங்கு உரிய சடங்குகள் செய்யப்பட்டு கருடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது கிராம மக்கள் கருடனுக்கு கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.அதன் பின்னர் கருடனின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.