கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x

குடியாத்தம் அருகே தங்கள் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலைமறியல் செய்தனர்.

வேலூர்

குடிநீர் இணைப்பு

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சியில் உள்ள ஆத்தோரம்பட்டி கிராமத்திற்கு உள்ளி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் உள்ளி கிராமத்திலிருந்து பட்டுவாம்பட்டி, ஞானமேடு, வேலாயுதம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் தனியாக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான ஆழ்துளை கிணறு பழுதானதால் அந்தப் பகுதிக்கு குடிநீர் செல்லவில்லை. இதனையடுத்து ஆத்தோரம்பட்டிக்கு செல்லும் குடிநீர் இணைப்பிலிருந்து பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு உள்ளிட்ட பகுதிக்கு குடிநீர் இணைப்பு தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

சாலை மறியல்

இதனை அறிந்த ஆத்தோரம்பட்டி கிராம மக்கள் எங்கள் பகுதி குடிநீர் இணைப்பில் மற்ற பகுதிக்கு இணைப்பு கொடுத்தால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனக்கூறி நேற்று மாலையில் உள்ளி ெரயில்வே மேம்பாலம் அருகே மாதனூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், ஊராட்சிமன்ற தலைவர் ஜெய்சங்கர், துணைத்தலைவர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி உள்ளிட்டோர் சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆத்தோரம்பட்டி இணைப்பில் இருந்து மற்ற பகுதிக்கு குடிநீர் இணைப்பு தரப்படவில்லை என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அரை மணிநேரம் நடைபெற்ற சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story