கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x

பாணாவரம் அருகே இடிந்து விழுந்த பயணிகள் நிழற்கூடத்தை அதே இடத்தில் கட்டக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

பயணிகள் நிழற்கூடம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த ரங்காபுரம் கூட்ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நிழற்கூடம் மீது கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் டிப்பர் லாரி ஒன்று மோதியதில் பயணிகள் நிழற்கூடம் இடிந்து விழுந்தது. அப்போது நிழற்கூடத்தில் தூங்கிகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பயணிகள் நிழற்கூடம் இடிந்து சுமார் 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அந்தபகுதியில் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஏற்கனவே நிழற்கூடம் இருந்த அதே இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கான பணி தொடங்கியபோது, அருகே வசிக்கும் தனி நபர் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் நிழற்கூடம் அமைக்கக் கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் நிழற்கூடம் அமைக்கும் பணி கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலைமறியல்

நீண்ட நாட்களாகியும் நிழற்கூடம் அமைக்காமல் இழுத்தடித்து வருவதை கண்டித்தும், ஏற்கனவே இருந்த இடத்தில் நிழற்கூடம் அமைக்க வலியுறுத்தியும் சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.

தொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் சம்மந்தபட்ட தனிநபர் என்னுடைய பட்டா நிலத்தில் எப்படி நிழற்கூடம் கட்டலாம் என மீண்டும் பிரச்சினையில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலர் முகமது சைபுதீன், வருவாய்த்துறையினர், போலீசார் சென்று உடனடியாக நிலத்தை அளவீடு செய்து மீண்டும் அதே இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும்பணியை தொடங்கினர்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கிராமநிர்வாக அலுவலர் முரளி மனோகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசிட், யோக பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story