ராதாபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
ராதாபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.22 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கிராம மக்கள் அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு நேற்று மதியம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு தேர்வு செய்துள்ள இடம் பள்ளமாக இருப்பதால் மேடான பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக இருக்காது. எனவே, மேடான பகுதியை தேர்வு செய்து, அங்கு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, ஒன்றிய பொறியாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார், ஊராட்சி செயலாளர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் தொட்டி கட்ட வேறு இடம் பார்ப்பது குறித்து மறு பரிசீலனை செய்வதாக கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.