மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
குப்பநத்தம் அணையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குப்பநத்தம் அணையில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் கடந்த சில ஆண்டுகளாக மீன்பிடி குத்தகை சாத்தனூர் பகுதியை சேர்ந்த மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் சாத்தனூர் பகுதியை சேர்ந்த நபர் மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீன்பிடி குத்தகை காலம் முடிந்தும் கூட தொடர்ந்து மீன் பிடித்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் மீன்பிடி குத்தகைதாரருக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடிக்க வந்த நபர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், கல்லாத்தூர், தொட்டிமடிவு, துரிஞ்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குப்பநத்தம் அணை கட்டுவதற்காக தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலம், வீடு உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளோம். ஆனால் குப்பநத்தம் அணையில் மீன்பிடி குத்தகை பொது வெளியில் அறிவிக்காமல் ஏலம் திரை மறைவில் நடத்தி வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு ஏலத்தை வழங்கி வருவதாக கூறினர்.
கொட்டகைக்கு தீ வைப்பு
மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு திடீரென தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.