தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் கற்கள் அரைக்கும் கிரசரை மூடக்கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் கற்கள் அரைக்கும் கிரசரை மூடக்கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலையில் முப்பிலிவெட்டி கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முப்பிலவெட்டி கிராமத்தில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான கற்கள் அரைக்கும் கிரசரை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து கிராம மக்களுடன் தாசில்தார் நிஷாந்தினி தலைமையில் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் சுகதா ரஹிமா, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது முப்பிலிவெட்டி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான கற்கள் அரைக்கும் கிரசருக்கு பஞ்சாயத்தில் முறையான வரைபட அனுமதி பெறவில்லை. கிராம பஞ்சாயத்திற்கு முறையாக தொழில் வரி செலுத்தவில்லை. மேலும் குடியிருப்பு மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதியில் கிரசர் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த கிரசர் செயல்பட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.

தாசில்தார் உறுதி

சமாதான பேச்சுவார்த்தையின்போது தாசில்தார் கூறுகையில், இந்த கோரிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக மனுவாக மாவட்ட கலெக்டருக்கு கொடுக்கும்படியும், கிரசர் உரிமைத்திணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கிரசர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும், என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட கிராமமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story