ரேஷன் கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
நிலக்கோட்டை அருகே பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்வதாக கூறி ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டை அருகே எத்திலோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அரிசியை வாங்கி சென்ற கிராம மக்கள், அதனை எடுத்து சமைப்பதற்காக தண்ணீரில் ஊற வைத்தனர். அப்போது, சில அரிசிகள் மிதந்தன. இதைக்கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவை பிளாஸ்டிக் அரிசி என்று நினைத்து, விற்பனையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்றும், செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி, முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் கூறுகையில், ரேஷன்கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அவை சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும், தண்ணீரில் மிதப்பதால் அவை பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.