ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
செம்பட்டி அருகே உள்ள அக்கரைப்பட்டி கிழக்கு தெரு பகுதியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், சாலை, சாக்கடை, கழிப்பறை, சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கரைப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிராம மக்கள் தாமாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் அக்கரைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தகுதியான சமையலர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.