ரேஷன் கார்டு, ஆதார் அட்டையுடன் கிராமமக்கள் போராட்டம்
நிலஅளவீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியை களையக் கோரி ரேஷன்கார்டு, ஆதார் அட்டையுடன் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
நிலஅளவீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியை களையக் கோரி ரேஷன்கார்டு, ஆதார் அட்டையுடன் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் சிட்டா நிறுத்தி வைப்பு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே களத்தூர் ஊராட்சியில் களத்தூர் கிழக்கு, களத்தூர் மேற்கு என 2 கிராமங்கள் உள்ளன. தற்போது களத்தூர் மேற்கு கிராமத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கு சொந்தமான வயல், தோப்பு, வீட்டுமனை என சுமார் 250 ஏக்கர் நிலத்தின் கிரயப்பத்திரம், பட்டா, கணினி சிட்டா, வீட்டு வாி ரசீது போன்ற ஆவணங்களில் களத்தூர் மேற்கு என பதிவாகி உள்ளது.இந்தநிலையில் களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சூரியநாராயணபுரம் கிராமத்துடன், களத்தூர் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 184.62 ஏக்கர் நிலத்தை இணைப்பதாக வருவாய்த்துறையினர் அறிவித்ததுடன் சில மாதங்களாக, ஆன்லைன் சிட்டாவையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
கிராமமக்கள் போராட்டம்
இதையடுத்து களத்தூர் மேற்கு கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், வருவாய்த்துறையினர் உடனடியாக பழைய முறைப்படி தங்கள் கிராமத்துடனே இந்த விளை நிலங்களுக்கான சிட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர்.அந்த மனுவில், சூரியநாராயணபுரத்தை சேர்ந்த சிலர், பட்டா கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, சூரியநாராயண புரத்தில் உள்ள 366.97 ஏக்கர் நிலத்துடன், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள 184.62 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்த தவறாக சேர்த்து வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்யப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் தவறாகச் செயல்பட்டதால், களத்தூர் மேற்கு கிராமத்தில் உள்ள நிலத்திற்கு சூரியநாராயணபுரத்தில் பட்டா, சிட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த தவற்றை சாி செய்து, மீண்டும் பழைய படி எங்கள் ஊர் பெயரில் நிலத்திற்கு சிட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.