வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
வேடசந்தூர் அருகே வெள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அச்சனம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில், கிளைச்செயலாளர் பூமிபாலன், நிர்வாகிகள் முனீஸ்வரன், முத்துசாமி மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
அச்சனம்பட்டியில் சாலை அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அச்சனம்பட்டி காலனியில் உள்ள வீடுகளை மராமத்து செய்ய வேண்டும். சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கிராம மக்களிடம், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.