நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு; கூட்டுறவு கடன் சங்கத்தை கிராம மக்கள் முற்றுகை
வடமதுரை அருகே நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு செய்ததாக கூட்டுறவு கடன் சங்கத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
வடமதுரை அருகே அரண்மனைப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள், பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் எடை மற்றும் தேதியை மாற்றி முறைகேடு செய்து நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று கூறுகின்றனர். இந்த ஊர், மலைக்கிராமம் என்பதால் இங்கு படிப்பறிவு குறைவான மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களை குறி வைத்து கடன் சங்க ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை பெற்று, அதை மாவட்ட இணை பதிவாளரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.