சுடுகாடுக்கு இட வசதிகோரிபாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
பேளாரஅள்ளி ஊராட்சியில் சுடுகாடுக்கு இட வசதிகோரி பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு:
பேளாரஅள்ளி ஊராட்சியில் சுடுகாடுக்கு இட வசதிகோரி பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாடு வசதி
பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி ஊராட்சி காவாப்பட்டி, சுன்னாம்பட்டி, பெருமாள் கோவில் தெரு, பசுமைபுரம், செல்லியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் யாராவது இறந்து விட்டால் ஆற்று பகுதிக்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கிராமங்களில் மக்கள் தொகை அதிகரிப்பால் சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 3 ஏக்கர் உள்ளதாகவும், அந்த இடத்தின் ஒரு பகுதியை சுடுகாடு, தகனமேடை அமைக்ககோரி பொதுமக்கள் பாலக்கோடு தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்ததாக ெதரிகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பரபரப்பு
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்ககோரி பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் அலுவலகத்தில் தாசில்தார் இல்லாததால் கிராம மக்கள் அங்கிருந்த அதிகாரியிடம் கோரிக்கையை நிறைவேற்றகோரி மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.