குளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு


குளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே குளத்தூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி குளத்தூர் அருகே உள்ள கெச்சிலாபுரம் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், "கெச்சிலாபுரம் கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் குளம் தூர்வாருதல், பேவர் பிளாக் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.55.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.64 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கலெக்டரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்" என்றார்,

மானியத்தில் உளுந்து விதை

தொடர்ந்து, விவசாயிகள் 2 பேருக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கரன், வேளாண் உதவி இயக்குனர் கீதா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இலுப்பையூரணி

கோவில்பட்டி யூனியன் இலுப்பையூரணி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம் தலைமை தாங்கினார். துணை தலைவர் குருவம்மாள் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து செயலாளர் ரத்தினகுமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனியசாமி, ஜான்சி ராணி, வார்டு உறுப்பினர்கள் வடிவேல், ரமணன், ராமமூர்த்தி, சந்தன மாரியம்மன், கணேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சுந்தரேஸ்வரி, தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ண பிரியாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் பஸ்நிலையம் கட்டுவது சம்பந்தமாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை அரசு அங்கீகாரம் பெற்ற திருவிழாவாக அறிவிக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) மீனாம்பாள், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, ஊராட்சி துணைத் தலைவர் கணேசன், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூழ்தீன் செய்திருந்தார். கூட்டத்தில் வருவாய், மீன் வளத்துறை, கால்நடைத்துறை, அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story