கோவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் ஊராட்சியில் கொட்டும் மழையிலும் நடந்த கிராம சபை கூட்டத்தை அமைச்சர் பங்கேற்று நடத்தினார்.
கோவூர் ஊராட்சி
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவித்ததன் பேரில் காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவூர் ஊராட்சியில் சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது திடீரென மழை பெய்ததால் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கலைந்து செல்ல முயன்றனர். அப்போது அமைச்சர் பொதுமக்களுடன் அமர்ந்து இருந்ததால் பொதுமக்களும் அங்கேயே அமர்ந்தனர். இருப்பினும் மழை விடாமல் பெய்ததால் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் கிராமசபை கூட்டத்தை அமைச்சர் நடத்தினார். கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
மேலும் அங்குள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் புதிதாக தேர் செய்வதற்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொகை ரூ.50 லட்சத்தை பொதுமக்கள் வசூல் செய்து தரவேண்டும் எனக்கூறிய நிலையில் அப்போதே அங்கிருந்த 2 வார்டு உறுப்பினர்கள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான தொகையை தேர் செய்வதற்கு தங்கள் பங்களிப்பை அளித்தது குறிப்பிடத்தக்கது. கொட்டும் மழையில் பொதுமக்களுடன் அமைச்சர் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சீவாடி ஊராட்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராமசபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் பற்றி தீர்மானம் செய்யப்பட்டது.
தீர்மானங்கள்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கணக்கெடுப்புப் பணிகள், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சீவாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.