கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் அதிரடி பணிநீக்கம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளரை பணிநீக்கம் செய்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு செய்தது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளரை பணிநீக்கம் செய்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிராம நிர்வாக அதிகாரி
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மாடசாமி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது பதவியை பயன்படுத்தி உறவினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாகவும், அதனை 2019-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் பெயருக்கு மாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதேபோல் உதவியாளராக (தலையாரி) பணியாற்றிய மந்திரமூர்த்தி என்பவரும் முறைகேடாக உறவினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, பின்னர் அதை குடும்பத்தினர் பெயருக்கு மாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
முறைகேடு
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் தங்களது பதவிகளை பயன்படுத்தி இலவச வீட்டுமனை பட்டாவில் மோசடி செய்ததாகவும், இலவச வீட்டுமனை பட்டாக்களை 20 ஆண்டுகளுக்கு பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்று விதி இருக்கும்போது ஒரே ஆண்டில் முறைகேடாக பெயர் மாற்றம் செய்து மோசடி செய்துள்ளதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட தகவலில் இது உண்மை என கண்டறியப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
முறைகேடு உறுதி
இதுதொடர்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில், உரிய விசாரணை நடத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆரைக்குளம் கிராம நிர்வாக அதிகாரி மாடசாமி, உதவியாளர் மந்திரமூர்த்தி ஆகியோர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு செய்தது உறுதியானது.
பணிநீக்கம்
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பணிநீக்கம் செய்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்படவில்லை. அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.