விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி அதிரடி கைது
ஆதரவற்றோர் சித்ரவதை, பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விக்கிரவாண்டி ஆசிரம நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆசிரமத்தில் அரசு அதிகாரிகள், போலீசார் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வந்ததும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியதோடு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், ஆசிரமத்தில் இருந்த 16 பேர் மாயமாகியிருப்பதும், அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்களும் அம்பலமானது.
இதையடுத்து ஆசிரமத்தில் தங்கியிருந்த 141 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8 பேர் கைது
இது தொடர்பாக கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி மனைவி மரியா ஜூபின், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியை சேர்ந்த ஆசிரம மேலாளரான பிஜூமோகன், ஆசிரம பணியாளர்களான விழுப்புரம் அயினம்பாளையத்தை சேர்ந்த பூபாலன், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நாராயணபுரத்தை சேர்ந்த முத்துமாரி, விக்கிரவாண்டி அருகே விநாயகபுரத்தை சேர்ந்த கோபிநாத், நரசிங்கனூரை சேர்ந்த அய்யப்பன், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தாஸ், தெலுங்கானாவை சேர்ந்த சதீஷ் ஆகிய 8 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆசிரம நிர்வாகியான ஜூபின்பேபி, தன்னை குரங்குகள் கடித்ததால் காயமடைந்ததாக கூறி முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு சென்று நீதிபதி விசாரணை
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஜூபின்பேபியை விரைந்து கைது செய்யவும் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசாரின் அழைப்பை ஏற்று விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அகிலா நேற்று அதிகாலை 4 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபியிடம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜூபின்பேபியை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அகிலா உத்தரவிட்டார்.
ஆசிரம நிர்வாகி கைது
இதனைத்தொடர்ந்து ஜூபின்பேபியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு இன்னும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியதால் ஜூபின்பேபியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலேயே வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இச்சம்பவத்தில் ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின்பேபி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு விசாரித்தால்தான் ஆசிரமத்தை பற்றி எழுந்துள்ள பரபரப்பான புகார்கள், திடுக்கிடும் தகவல்களின் பின்னணி பற்றிய முழு விவரமும் தெரியவரும்.