புகை மண்டலமாக காட்சி


புகை மண்டலமாக காட்சி
x

புகைமண்டலமாக கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி சாலை காட்சி அளிப்பதால் கல்லூரி மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தஞ்சாவூர்

புகைமண்டலமாக கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி சாலை காட்சி அளிப்பதால் கல்லூரி மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கிளை ஆறுகள்

கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இதனால் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் ஆற்று பாசனத்தையே நம்பியே உள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய காவிரி ஆறு தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. இந்த ஆறுகளில் இருந்தும் வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆறு என பல்வேறு கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்திற்குள் நுழையும்போது 5 கிளைகளாக பிரிகிறது. இவற்றில் ஒன்று அரசலாறு ஆகும்.

கொட்டப்படும் குப்பைகள்

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் தொடங்கி கும்பகோணம் வழியாக பயணித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை அரசலாறு செல்கிறது. இந்த ஆறு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆற்று பகுதியில் பல இடங்களில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து அண்ணலக்ரஹாரம் பகுதிக்கு செல்லும் அரசலாறு கரையில் தான் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதுவும் இரவு நேரத்தில் சரக்கு ஆட்டோக்களில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், காய்கறி கழிவுகள் சிறிய, சிறிய பாலிதீன் பைகளில் அடைத்தவாறு கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.

புகைமூட்டமாக காட்சி

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சிலர் தீயிட்டு கொளுந்தி விடுகின்றனர். இதன்காரணமாக அரசலாறு கரையின் அருகில் உள்ள அரசு பெண்கள் கல்லூரி வளாகம் மற்றும் சாலை முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் கல்லூரி மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கல்லூரி அருகே அரசலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் வரும்போது குப்பைகளும் மிதக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அரசலாறு உள்பட நீர்நிலைகளில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story