பள்ளிக்கூடம், கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி பள்ளிக்கூடம், கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
வித்யாரம்பம் நிகழ்ச்சி
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10-வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பச்சரிசியில் 'ஹரி ஓம்' என எழுதி கல்வி கற்றலை தொடங்கினர்.
சரஸ்வதி கோவில்
டவுன் காந்திமதி அம்பாள் கோவில் எதிரே உள்ள சரஸ்வதி கோவிலுக்கு நேற்று ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வந்திருந்தனர். அங்கு படிப்பை தொடங்குவதற்கு பெற்றோர் தங்களுடைய குழந்தையின் விரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுதினர். சிலர் மஞ்சள் துண்டுகளைக்கொண்டு குழந்தைகளின் கையை பிடித்து அரிசியில் எழுத்துக்களை எழுதினர். இதேபோல் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.