தொடரும் மழையால் கடும் குளிர்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் முதியோர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் முதியோர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தொடர் மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழை தென் மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் இங்குள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்கள் நிரம்பி தற்போது அதன் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
மேலும் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் மாவட்டம் முழுவதும் தற்போது நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை, இளையான்குடி, காரைக்குடி, கல்லல், மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடும் குளிர்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெயில் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டமாகவும் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் குடைகள், ரெயின் கோர்ட்டுகள் விற்பனை சூடுபிடித்துள்ளன.
பொதுவாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இறுதியில் தான் பனிக்காலம் தொடங்கி மார்கழி, தை மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு தாக்கம் காணப்படும். இந்நிலையில் இந்தாண்டு முன்பாகவே மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை 6 மணிக்கே குளிர் தொடங்கிவிடுகிறது.
மேலும் கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் அதிகளவு குளிர் காணப்படுவதால் இரவு நேரத்தில் முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.