வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
கோவை
கோவையில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடாக நேற்று கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் மண்டல அளவிலான வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 17 ஆயிரத்து 106 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஓட்டு சீட்டு சரிபார்ப்பு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
கலெக்டர் முன்னிலையில் சரிபார்ப்பு
இந்த நிலையில் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் கண்காணிப்பு கேமரா கண்காணிப்புடன் நேற்று நடந்தது. முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல் திறக்கப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்த பெங்களூருவை சேர்ந்த தனியார் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் அடங்கிய குழுவினர் 5 பேர் வந்து உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு எந்திரமாக சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியானது 20 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்றும், இதேபோல நாடு முழுவதும் இருக்கும் தேர்தல் ஆணையக்கிடங்குகளிலும் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.