வேப்பனப்பள்ளி அருகே நுளம்பர் காலத்து கன்னட நடுகல் கண்டுபிடிப்பு


வேப்பனப்பள்ளி அருகே  நுளம்பர் காலத்து கன்னட நடுகல் கண்டுபிடிப்பு
x

வேப்பனப்பள்ளி அருகே நுளம்பர் காலத்து நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி அருகே நுளம்பர் காலத்து நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுளம்பர்கள்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள் வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பன்னப்பள்ளி கிராமத்தில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊருக்கு வடக்குப்புறம் உள்ள விளைநிலத்தில் 'நிலவுக்கல்' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் நுளம்பர் காலத்து கன்னட நடுகல் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை பல்வேறு அரசு மரபினர்கள் ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக கி.பி. 6-ம் நூற்றாண்டில் இருந்த கன்னட அரச மரபினர்களான கங்கர்கள், நுளம்பர்கள், ஒய்சாளர்கள் இருந்தனர். அந்த காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த அரச மரபினர்களின் காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி கல்வெட்டுகள், நடுகற்கள், நடுகல் கல்வெட்டுகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு வருகிறது.

அன்னிகன் மன்னன்

அதன்படி, தற்போது பன்னப்பள்ளி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு கி.பி. 910-ம் நூற்றாண்டை சேர்ந்த நுளம்பர் மன்னன் வீரா நுளம்பன் என்று அழைக்கப்படும் அன்னிகன் என்ற மன்னனின் காலத்து கன்னட மொழி நடுகல் கல்வெட்டு ஆகும். நடுகல்லில் உள்ள வீரனின் வலது கையில் வாள் ஏந்தியவாறும், இடதுகையில் வில் ஒன்று பிடித்தவாறும் உள்ளது. மேலும் வீரனின் இடுப்பில் இடைவாள் ஒன்றும் உள்ளது. வீரனின் கழுத்தில் அணிகலன்களும், கைகளில் காப்பு மற்றும் வளையங்களும் அணிந்துள்ளான்.

அதே போல் வீரனின் இடது கையின் மேல் பகுதியில் 2 தேவதைகள் இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் கல்வெட்டில் மூன்றாம் கிருஷ்ணனின் படைத்தளபதியான அரகெல்லா என்பவர் இப்பகுதியில் படையெடுத்தபோது, அவருடன் எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீர மரணமடைந்துள்ளார்.

வீர மரணம்

அவ்வாறு போரில் வீர மரணமடைந்த பாலையாவுக்கு அன்னிகன் என்ற வீர நுளம்பன், அந்த வீரனின் வீரத்தை போற்றி நிலம் தானமாக கொடுத்துள்ளான் என்ற செய்தியை இந்த நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும் போரில் வீரமரணம் அடைந்த பாலையாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர் வீரத்தையும், அரசன் கொடுத்த நில தானத்தையும் போற்றும் வகையில் இந்த நடுகல்லை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story