தேனாம்பேட்டையில் துணிகரம்: ஏ.டி.எம். மையத்தின் வாசலில் கத்திமுனையில் ரூ.5 லட்சம் கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


தேனாம்பேட்டையில் துணிகரம்: ஏ.டி.எம். மையத்தின் வாசலில் கத்திமுனையில் ரூ.5 லட்சம் கொள்ளை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x

சென்னை தேனாம்பேட்டையில் வங்கி ஏ.டி.எம். மையத்தின் வாசலில் வைத்து ரூ.5 லட்சத்தை கத்திமுனையில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டையைச்சேர்ந்தவர் மைதீன். இவர், உலர் பழ வகைகள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர், கமிஷன் அடிப்படையில், யாராவது கொடுக்கும் பணத்தை ஏ.டி.எம்.எந்திரம் மூலம் டெபாசிட் செய்வார். தனக்கு நன்கு அறிமுகமான நஜீம் என்பவர் கொடுத்த ரூ.9 லட்சத்தை, நேற்று முன்தினம் மைதீன், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் டெபாசிட் செய்தார். இதில் ரூ.4 லட்சம் மட்டும் அங்கு டெபாசிட் செய்ய முடிந்தது.

மீதமிருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு, இன்னொரு ஏ.டி.எம். மையத்துக்கு புறப்பட்டார். ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வந்த அவரை மர்ம கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது.

அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மைதீன் வைத்திருந்த ரூ.5 லட்சத்தையும் மின்னல் வேகத்தில் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத மைதீன், கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

மைதீன் லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள்தான், இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை கைது செய்ய 4 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story