வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா


வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் - காமராஜ் நகர் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. கொடியேற்றத்தன்று பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, உச்சிக்கால பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு கோவில் வளாகத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு 1,008 திருவிளக்கு பூஜை நடத்தினர்.

மேலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் திருவிழாக்கள் நடத்தினர். திருவிழாவின் சிகர நாளான பத்தாம் நாள் திருவிழா நாடார் சமுதாய மண்டகப்படி சார்பில் நேற்று நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காலை பக்தர்கள் கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தியும், இதேபோல் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, பனையடிப்பட்டி, செட்டியூர், திப்பனம்பட்டி, சிவநாடானுர், ஆவுடையானூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.

மேலும் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்தார். ஊர்வலம் கோவில் வந்தடைந்தவுடன் மதியம் சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கோவில் வளாகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், கடையம் ரோடு, சுரண்டை ரோடு உள்பட பல்வேறு இடங்களில் அந்தந்த பகுதி வியாபாரிகள் இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்திருந்தனர். இன்று சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது.



Next Story