'வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்' - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி


வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்  - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி
x

வேங்கைவயல் வழக்கின் புலன்விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாத காரணத்தால், எதிர்வரும் மக்களவை தேர்தலை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 15 மாதங்கள் ஆகியும் புலன்விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது? என காவல்துறைக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை, குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கின் புலன்விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 3-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



Next Story