வேலூர் சரக குற்ற கலந்தாய்வு கூட்டம்


வேலூர் சரக குற்ற கலந்தாய்வு கூட்டம்
x

வேலூர் சரக குற்ற கலந்தாய்வு கூட்டம் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன், பாலகிருஷ்ணன், கிரண்ஸ்ருதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது மற்றும் அதில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டன.

இதில், வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேலூர் சரகத்தை சேர்ந்த போலீசாருக்கான ஒருநாள் முதலுதவி பயிற்சி வேலூர் பணியிடை பயிற்சி மையத்தில் நடந்தது. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.


Next Story