வேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்


வேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்
x

வேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

வேலூர் - சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கண்காணிப்பு கேமராக்கள், வருகைப் பதிவேடு, ஒப்பந்த வாகனங்கள் பதிவேடு என பல்வேறு கண்காணிப்பு முறைகள் இருந்தபோதிலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் வருகைப் பதிவை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டில் ஈடுபட்டோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் ஆகியவற்றை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story