சேறும், சகதியுமான சாலையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
பெரியகுயிலியில் சேறும், சகதியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை
பெரியகுயிலியில் சேறும், சகதியுமான சாலையால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழுதான சாலை
சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகுயிலி கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே தார் சாலை உள்ளது. இதன் வழியாக தேகாணி, இடையர்பாளையம், போகம்பட்டி, பாப்பம்பட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். ேமலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சேறும், சகதியுமாக...
இதுகுறித்து அந்த கிராம பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள பிரதான தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சாலை, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.
இந்த சமயத்தில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.