வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றை ஆக்கிரமித்த செடி, கொடிகள் அகற்றப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றை ஆக்கிரமித்த செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
வத்தலக்குண்டு நகரின் முக்கிய நீராதாரமாக மஞ்சளாறு விளங்கி வருகிறது. இந்த ஆறு, வத்தலக்குண்டு காமராஜபுரம், பெரியகுளம் சாலை, பிலீஸ்புரம், நடுத்தெரு, தெற்குத்தெரு வழியாக செல்கிறது. தற்போது ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இருப்பினும் ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதில் தடை ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், முறையாக தண்ணீர் செல்ல முடிவதில்லை. மாறாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும் சூழல் உள்ளது. இதுதவிர ஆற்றில் வளர்ந்துள்ள செடி, கொடிகளுக்கு இடையே பாம்பு, தேள், விஷ பூச்சிகள் உள்ளன. இவை அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியகுளம் சாலையில் உள்ள மஞ்சளாற்றில் செடி, கொடிகள், குப்பைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். மஞ்சளாற்றின் கரைகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறும் முன்பு ஆற்றில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.