ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்


ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் எப்போதுமே பொதுமக்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மளிகை, காய்கறியின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

தக்காளி விலையை பொறுத்தவரையில், விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே சில்லறைக் கடைகளில் அதைவிட அதிகமாக ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பதையும் பார்க்க முடிகிறது.

தக்காளிதான் இப்படி என்றால், இஞ்சி விலையைக் கேட்டால் நெஞ்சு வலி வந்துவிடும் போல் இருக்கிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் விற்பனை

தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட ரேஷன் கடைகள், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலையில் அதனை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டு, அதன்படி விற்பனையும் நடந்து வருகிறது. ஆனாலும் அது அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறிதான்.

அதுமட்டும் அல்லாது, சின்ன வெங்காயம், பீன்ஸ், பாகற்காய், மிளகாய் உள்பட முக்கிய காய்கறி வகைகளின் விலை 'கேட்டாலே ஷாக்' அடிக்கும் வகையில் எகிறிப்போய் இருக்கிறது.

மளிகை பொருட்களின் விலையோ மற்றொரு பக்கம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரிசி, துவரம் பருப்பு, சீரகம், சோம்பு, பூண்டு, மிளகாய், ஏலக்காய் மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றின் விலை கடந்த மாதத்தைவிட பெருமளவில் அதிகரித்து உள்ளது.

மளிகை பொருட்கள்

தக்காளி விலை கட்டுக்குள் வருவதற்கு இன்னும் 2 வார காலங்கள் ஆகும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறி வகைகள் வரத்தை பொறுத்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மளிகை பொருட்கள் விலையை பார்க்கும் போது, இப்போது தான் உயர ஆரம்பித்து இருப்பதாகவும், இன்னும் வரக்கூடிய நாட்களிலும் உயருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இப்படியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதுதொடர்பாக சிலர் கருத்து கூறியிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

விலைவாசி அதிகரிப்பு

ராஜபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி திவ்யா:- ஏற்கனவே விலைவாசி அதிகரித்த நிலையில் தற்போது காய்கறி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. சந்தைக்கு சென்று விருப்பமான காய்கறிகளை வாங்கி வரும் நிலையில் தற்போது விலை மலிவான காய்கறிகளை வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் குடும்ப வருமானம் உயராமல் இருப்பது பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. மாதத்தின் மொத்த வருவாயில் இருந்து சிறு பங்கை சேமித்து வந்துள்ள நிலையில், தற்போது சேமிப்பு என்பதே இயலாமல் போய்விட்டது. பொழுதுபோக்குக்காக செலவழிப்பதும் குறைகிறது. கடன் இல்லாத மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது பலருக்கு கடினமாகிறது.

உணவுப்பொருட்கள் பதுக்கல்

சிவகாசியை சேர்ந்த ஆறுமுகச்சாமி:-

கடந்த 10 நாட்களில் குறிப்பிட்ட சில மளிகை பொருட்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு சரியான காரணம் தெரியவில்லை. குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதால், அதில் சந்தேகமும் உள்ளது. பல இடங்களில் உணவுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மளிகை கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். அவ்வாறு விலை பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் விலை உயர்வு இருக்க வேண்டும். குறிப்பாக ஏழை மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்க கூடாது.

பாதிப்பு இல்லை

வியாபாரி மான்ராஜன்:-

பூண்டு, புளி, அரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் உள்ளிட்ட சில மளிகை பொருட்களின் விலை கடந்த 10 நாட்களில் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விற்பனையில் எவ்வித பாதிப்பும் இல்லை. 5 சதவீதம் பேர் வழக்கமாக வாங்கும் அளவுகளை விட குறைந்த அளவுகளில் மளிகை பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

மற்றவர்கள் வழக்கம் போல் தேவையான அளவு மளிகை பொருட்களை விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் வாங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான மளிகை பொருட்களை மொத்தமாக வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் விலை உயர்வை தாங்கிக் கொள்கிறார்கள்.

கட்டுப்படுத்த வேண்டும்

பாளையம்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி சின்ன தங்கம்:-

விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தக்காளி விலை உயர்ந்த நிலையில் சின்ன வெங்காயமும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளும், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தினசரி ரூ.200, ரூ.300-க்கு கூலி வேலை செய்யும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் விலைவாசி உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர். இப்படியே விலைவாசி அதிகரித்து கொண்டே சென்றால் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளோம். விலைவாசி உயர்வை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும். வாங்கும் சம்பளத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழலில் உள்ளோம்.

இருப்பு சரக்கு

விருதுநகரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி செந்தில்குமார்:-

விருதுநகரில் கடந்த வாரத்தை விட பருப்பு வகைகள் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த வாரம் துவரம் பருப்பு கிலோ ரூ. 147 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.140 ஆக குறைந்துள்ளது. உளுந்தம் பருப்பு கிலோ ரூ.119 ஆக இருந்த நிலையில் ரூ. 116 ஆக குறைந்துள்ளது. பாசிப்பருப்பு ரூ.100-க்கும், கடலைப்பருப்பு ரூ.60-ல் இருந்து ரூ.63 ஆக விலை உயர்ந்துள்ளது. பூண்டு கடந்த வாரம் கிலோ ரூ.145 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 180 ஆக உயர்ந்துள்ளது. இறக்குமதி சரக்கு தீர்ந்து விட்ட நிலையில் தற்போது இருப்பு சரக்கு விற்பனையாகி வரும் நிலையில் விலை உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு பலன் இல்லை

மேல ஒட்டம்பட்டியை சேர்ந்த தமயந்தி:

நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது பூண்டு, தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளும் தொடர்ந்து விலை உயருவதால் உணவில் காய்கறிகளை குறைத்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பிள்ளைகளுக்கு புளியோதரை, தயிர் சாதம், லெமன் சாதம் என செய்து கொடுக்கிறோம். காய்கறிகளின் விலை உயர்வினால் பலன்களை விவசாயிகள் பெறாமல் வியாபாரிகள் தான் பெறுகின்றனர்.

இதனால் தமிழக அரசு விலை ஏற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாங்கும் அளவு குறைந்தது

விருதுநகரை சேர்ந்த காய்கறி வியாபாரி கார்த்திக்:- பொதுமக்கள் காய்கறி விலை உயர்வால் வாங்கும் அளவை குறைத்ததாலும் முகூர்த்தங்கள் அதிகமாக இல்லாததாலும் தக்காளி உள்ளிட்ட காய்களின் விலை மேலும் அதிகரிக்காமல் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இஞ்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பொதுவாக காய்கறி விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் வாங்கும் அளவை குறைத்து விட்ட நிலையில் காய்கறி விலை அதிகரிக்காமல் உள்ளது.

தரம் உயரவில்லை

அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த வன்னிய ராஜ்:-

தமிழகத்தில் தற்போது விலைவாசி உயர்வு கட்டுக்குள் அடங்காமல் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும் தக்காளி விலை ரூ.120-ஐ தொட்டு உள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு 10 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை ஆனது.

அதேபோல அனைத்து மளிகை பொருட்களின் விலையும் கிடு கிடுவென உயா்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள் விலை அதிகரிக்கிறதே தவிர விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story