இல்லத்தரசிகளை மிரள செய்யும் காய்கறி விலை


இல்லத்தரசிகளை மிரள செய்யும் காய்கறி விலை
x
தினத்தந்தி 1 July 2023 7:32 PM IST (Updated: 2 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகளின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகளின் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி, சின்ன வெங்காயம், அவரை உள்ளிட்டவை ரூ.100-ஐ தாண்டியிருப்பதால் இல்லத்தரசிகள் மிரண்டு போயுள்ளனர்.

கிடு, கிடு உயர்வு

திருப்பூரில் கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது சில வாரங்களாக காய்கறிகள் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததன் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். திருப்பூரில் 5 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய் என வீதி, வீதியாக கூவி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இப்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், சில இடங்களில் ரூ.110 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தக்காளி அதிகபட்சமாக ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் உள்ளூர் வரத்து அடியோடு குறைந்துள்ளதால் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

விஞ்சி நிற்கும் இஞ்சி

இதேபோல் அவரை ரூ.120, பீன்ஸ் ரூ.140 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பல காய்கறிகள் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் நிலையில் இவை எல்லாவற்றையும் விஞ்சும் விதமாக இஞ்சி ரூ.220-க்கு(பழையது) விற்பனை செய்யப்படுகிறது. புதிய இஞ்சி ரூ.160 முதல் ரூ.180 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சாதாரண நாட்களில் ரூ.40-க்கு விற்க வேண்டிய பச்சை மிளகாய் விலையும் அதிகரித்து தற்போது ரூ.130 ஆகியுள்ளது.

இதேபோல் பாகற்காய் ரூ.60 முதல் ரூ.70, வரி கத்தரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, பவானி கத்தரிக்காய் ரூ.90, முட்டைக்கோஸ் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.50 முதல் ரூ.70, சுரைக்காய் ரூ.30, கேரட் ரூ.80, ஊட்டி உருளை ரூ.60, சாதா உருளை ரூ.30, முருங்ைக ரூ.60, பீட்ரூட் ரூ.60, சவ்,சவ் ரூ.30, கோவக்காய் ரூ.30,வெண்டைக்காய் ரூ.40 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மிரளும் இல்லத்தரசிகள்

இதேபோல் பூண்டு (இமாச்சல்)ரூ.180, நாட்டு பூண்டு ரூ.140, புடலை ரூ.40, காலிபிளவர் ரூ.50(பெரியது),ரூ.40(சிறியது), கொத்தவரங்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.30, அரசாணிக்காய் ரூ.25, பூசணி ரூ.25, வெள்ளரி ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.90, சேனை ரூ.60, தட்டைப்பயறு ரூ.40, மாங்காய் ரூ.25, தேங்காய் ரூ.15முதல்ரூ.25(ஒரு எண்ணம்) ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சில காய்கறிகளை தவிர பெரும்பாலான காய்கறிகள் விலையில் சதமடித்து இரட்டை சதத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதால் இல்லத்தரசிகள் மிரண்டு ேபாயுள்ளனர். அதிலும் குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளான சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாள் சமையலையும் சமாளிப்பதற்கு இல்லத்தரசிகள் போராடி வருகின்றனர்.


Next Story