அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 2 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மோட்டார்சைக்கிளால் பரபரப்பு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 2 நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மோட்டார்சைக்கிளால் பரபரப்பு
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் இரும்பு நுழைவுவாயில் பகுதியில் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று ஒரு மோட்டார்சைக்கிள் நின்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அணையை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் மோட்டார்சைக்கிளில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அதன் அருகே செல்ல பயந்து வருகின்றனர். ஒரு சிலர் மோட்டார்சைக்கிளை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த படம் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று மோட்டார்சைக்கிளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். எங்காவது திருடப்பட்டு போலீசாருக்கு பயந்து மர்மநபர்கள் யாரேனும் இங்கு விட்டு சென்றனரா? அல்லது மோட்டார்சைக்கிளை இ்ங்கு நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்ற நபர்கள் வனவிலங்குகளால் தாக்கி இறந்ததால் 2 நாட்களாக கேட்பாரற்று நிற்கிறதா? ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.