வாழப்பாடி மைய அளவிலான விளையாட்டு போட்டி-600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
வாழப்பாடி மைய அளவிலான விளையாட்டு போட்டியில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விளையாட்டு போட்டி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாழப்பாடி மைய அளவிலான விளையாட்டு போட்டி நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வாழப்பாடி மையத்துக்குட்பட்ட வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், 3 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தம், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன.
600 பேர் பங்கேற்பு
இந்த போட்டியில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் அடுத்து நடைபெறும் வருவாய் அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.